Sunday 31 July 2016

பெருஞ்சுழி 44

ஆயுத சாலையில்  மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். "தாதையே! அறிக! போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை  நியாயங்களை  அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம்  மட்டுமே  போர்! அடங்கா வெறி என்பதே போர்! உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது! கிளர்ந்து விட்ட காமமும்  விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக!" அவன் செவிகளில்  விறலியின்  குரல் கேட்டது. கடலோசை நிறைந்த ஓரிடத்தில்  கல் மண்டபம்  ஒன்றில்  தலை சாய்த்து அமர்ந்திருப்பதாக தன்னை உணர்ந்தான். அதே நேரம்  தன்னை குனிந்து நோக்கும்  ஆதிரையை கண்டான்.
"இளவரசர் நஞ்சளிக்கப்பட்டிருக்கிறார். போர் நெருங்கும்  சமயத்தில்  உங்கள்  உறுதியை குலைக்கவே இச்செயல்  செய்யப்பட்டிருக்கிறது" என யாரோ சொல்வது கேட்டது.  ஆதிரை எழுந்துவிட்டாள்.

"அம்மா அம்மா" என கண்களில்  நீர்  வழிய அவளை அழைத்தான்  அரிமாதரன். "போருடை அணிவித்து அரிமாதரனை ஆயுத சாலைக்கு அழைத்து வாருங்கள். என் தேர் தட்டில் ஒரு பாதுகாப்பான சிற்றிடம் ஒருங்கட்டும். அவன் போரைக் காண வேண்டும். அவனுக்கு  நஞ்சளித்தவன் அறியட்டும்  என் மகன்  களம் காண பிறந்தவன் என" என்றவாறே வெளியே சென்றாள்  ஆதிரை.

"கணபாரர்  இன்னும்  சவில்யம்  நுழையவில்லை  அரசி. வன்தோளன் ஒரு பெரும்  வீச்சில்  சவில்யத்தை கைப்பற்ற நினைக்கிறார். மூன்று திசைகளில்  இருந்தும்  மூன்று  கூட்டு நாடுகளின் படைகளும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. மேலும்..." என சொல்ல வந்த அமைச்சர்  நிறுத்திக் கொண்டார்.

"தயங்க வேண்டாம். சொல்லுங்கள்  அமைச்சரே" என்றாள் ஆதிரை  கசந்த புன்னகையுடன்.

"மாரதிரனின்  புதல்வர்களை  நாம் இப்போது  விடுவித்தது பெரும்  பிழையாகியிருக்கிறது அரசி. அவர்கள்  தங்கள்  ஒற்றர்களின் வழியே சவில்யத்தின்  படை நிலைகள் குறித்த துல்லியமான  தகவல்களை அறிந்துள்ளனர். கருவிழி கண்டு தைக்கும்  அம்பென வன்தோளனின்  படை நம் படையினரை குலைக்கிறது. தங்கள்  அணுக்கத் தோழி மோதமதி  ஏனோ வாள் கொண்டு தலை அறுத்துக்  கொள்ள நினைத்தார்கள். அவரை மீட்டு மருத்துவ சாலையில்  வைத்திருக்கிறார்கள்"என்றவர் "கருணை கொண்டு வெளியேற்றப்பட்ட தன் புதல்வர்கள்  உங்களுக்கு துரோகம்  இழைத்ததும் பெற்ற பிள்ளையென வளர்த்த அரிமாதரனுக்கு அரண்மனையிலேயே நஞ்சூட்டப்பட்டதும் அவர்களின்  உளநிலையை மிகவு‌ம்  பாதித்திருக்கிறது என எண்ணுகிறேன்" என முடித்தார்.

ஆதிரை  மோதமதியை காணச் சென்றாள்.

விரிந்து கலைந்து கிடந்த கூந்தலுடன்  விழிகளில்  நீர்   வழிய நெஞ்சில் கைகளை கோர்த்துக் கொண்டு கிடந்தாள்  மோதமதி. ஆதிரையை  கண்டதும்  அவள் அழுகை  உச்சம்  தொட்டது. அவள் தலையை வருடிய வண்ணம்  ஆதிரை  மோதமதியின்  அருகே அமர்ந்தாள்.

"ஆதிரை  ஆதிரை என்னை மன்னித்து  விடம்மா. இல்லை. நான்  மன்னிக்கப்படக் கூடாது. இத்தகைய  பிள்ளைகளை பெற்ற என் கருவறையில்  வேல் பாய்ச்சிக்  கொண்டு இறக்கிறேன். என் செல்லம் அரிமாதரனை ஒரு முறை பார்த்தபின் உயிர் விடுகிறேன்" எனச் சொல்லி  மோதமதி  எழ முயல்கையில்  ஆதிரையின்  விழிகளில்  கருணையும்  குழப்பமும்  தீர்ந்து அவள் முகம்  சுடர்ந்தது. தன்னுள்  பரவும்  அச்சத்தை மோதமதி  உணர்ந்தாள். அவள் தலையை வருடிக் கொண்டிருந்த ஆதிரையின்  கை சட்டென்று  நின்றது. உச்சி மயிர் பற்றி மோதமதியை தரையில்  வீசி எறிந்தாள்  ஆதிரை.

"உன் விழிகளில்  மின்னிய கனவுகளை அறியாதவள் என எண்ணியிருந்தாயா என்னை? நம் படை நிலைகள்  குறித்து தகவல்கள்  சுனதபாங்கம் சென்றது உன் புதல்வர்கள்  வழியே அல்ல உன் வழியே. மோதமதி  உன்னால்  உயர்வானவற்றை எண்ணவே முடியாதென நானறிவேன். உன்னை நான்  சிறை கொண்டிருக்கிறேன்  என எண்ணி என்னினும்  உயர்ந்தவனாக நீ எண்ணும்  உன் தமையனின் புதல்வனை கொண்டு என்னை வீழ்த்தலாம் என நினைத்தாய். ஒருவேளை  அது நடந்திருந்தால்  நீ அவனிடம்  அடிமையாய் வாழ நேர்ந்திருக்கும். அடிமையாய் இருக்க உன் மனம்  விழைகிறது. முதலில்  உன் தந்தை அகீதர்  பின் உன் தமையன் விகந்தர் அதன்பின்  உன் கணவன்  மாரதிரன். இப்போது  உன் மருகன் வன்தோளன். சுனதபாங்கத்தின்  இளவரசியாக சவில்யத்தின்  அரசியாக ஒரு நொடி கூட நீ உன்னை உணரவில்லை. நீ அறிந்த சவில்யத்தின்  படை நிலைகள் என்னால்  உருவாக்கி அளிக்கப்பட்டது. அச்சித்திரம் பொய்யென வன்தோளன்  உணரும்  போது  சவில்யத்தின்  படைகள் முழுமையாக  களம் இறங்கியிருக்கும். அரிமாதரனுக்கு  நஞ்சூட்டியதும் நீ தான். அவன் பிழைத்ததும் என்னிடமிருந்து  தப்பவே உயிர் நீக்கம்  செய்ய  எண்ணி இருக்கிறாய். பேரரசி  நீங்கள்  அப்படி  எளிமையாக இறந்துவிட முடியாது. உன்னுடைய  எளிய வஞ்சத்தால் இறந்து கொண்டிருக்கும்  உயிர்களை நீ காண வேண்டும். உன் மருகன்  உன்னை ஒரு பொருட்டென்றே கொள்ளவில்லை  என்பதை நீ அறிந்தாக வேண்டும். வன்தோளன்  எனும்  பெரு வீரனை உன் வஞ்சத்தால்  என் போர்க்களம்  நோக்கித் திருப்பிவிட்டாய். களம் நின்று  முடிவெடுக்கும்  ஆழிமாநாட்டில் எஞ்சப் போவது ஆதிரையா வன்தோளனா என. புறப்படு உள்ளுறங்கும்  மிருகங்களை எழுப்பி விட்டாயல்லவா? விளைவுகளை வந்து பார்" என்றவள்  வாசலில்  தலை குனிந்து  நின்ற வீரனை நோக்கி "யானைச்சங்கிலியால் இவள் உடலை பிணைத்து என் தேர் தட்டில்  போடு" என்றவாறே வெளியே சென்றாள்.

மூன்று  வீரர்கள்  சேர்ந்து  தூக்கி வரும்  யானைச் சங்கிலியை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் மோதமதி.

பெருஞ்சுழி 43

எண்பது  வயதிருக்கும்  என எண்ணத் தக்க அந்த முதியவனுக்கு உண்மையில்  நூறு வயது கடந்திருந்தது. இளமையில்  பெரு வீரனாக இருந்தமைக்கான தடங்கள்  அவன் உடலில்  அழிந்து கொண்டிருந்தன. மதிழ்யம்  எனப் பெயர் கொண்ட ஆழிமாநாட்டின்  தென்னெல்லை தேசத்தை அவன்  அடைந்து மூன்று இரவுகள் கடந்திருந்தன. அன்னையின்  தாலாட்டை நோக்கி நகரும்  மகவென ஆழியை நோக்கி நடந்து கொண்டிருந்தான் முதியவன். கால்கள்  பின்னிட்டுத் தளர்ந்தன. சூரியனின்  இளங்கதிர்களே அவனை சுட்டெரிக்க  போதும்  என்றிருந்தது. ஆர்த்தெழும் கடலோசை கேட்கத் தொடங்கிய போது ஒரு மண்டபத்தை அடைந்தான்  முதியவன். ஏக்கம் நிறைந்த விழிகளுடன்  அவனை வெறித்து நோக்கின சுனதனின் விழிகளில். நிமிர்ந்த  உடலுடன்  எதிரே நின்றிருந்தாள் ஆதிரை.

பாணரும் விறலியருமாக வந்த சிறு குழு மண்டப நிழலில்  அமர்ந்தது. இளம் விறலியின் திறந்த தோள்களை நோக்கி தன் கண்களை  திருப்பினான் முதியவன். 'உப் உப்' எனச் சொல்லி பெரிய விழிகளால்  அவனை நோக்கிச்  சிரித்தது விறலியின் தோளில்  கிடந்த குழந்தை. அன்னையின்  முதுகுப்பின்னே அமர்ந்திருக்கும் முதியவனை நோக்கி கை நீட்டியது குழந்தை. உப்பு மணம் கொண்ட கடற்காற்று  தொண்டையை வறண்டு போகச் செய்தது. கால்களை  பற்றியிருக்கும் அன்னையின்  கரங்களை  விலக்கி முதியவனை ஓட எத்தனித்து முடியாததால் அன்னையை அடிக்கத் தொடங்கியது.

"எனக்கென வந்து தொலைந்தது பார்! சவமே! உன் அப்பன் தான்  அடிக்கிறான் என்றால் ஒரு வயது முடிவதற்குள் நீயும்  என்னை அடித்தே கொன்று விடு" என்று திட்டிவிட்டு மடியில்  குழந்தையை மடியில்  எடுத்துப் போட்டுக் கொண்டாள். புரியாது வெறித்த விழிகளால் அன்னையை நோக்கியது குழந்தை. பின் நெஞ்சதிர்ந்து அழத் தொடங்கியது. "ரோ ரோ ரோ யாரு யாருடா என் தங்கத்தை அடித்தது. இல்ல இல்ல அழக்கூடாது அழக்கூடாது" என சமாதானப்படுத்தத் தொடங்கினாள் அன்னை.

"தண்ணீர்" எனக் கேட்டவாறே தன் பின்னே மண்டபத்திலிருந்து சரிந்து விழும் முதியவனை அப்போது தான்  கண்டாள் விறலி. மற்றவர்களும்  கண்டு விடவே மீண்டும்  முதியவனை மண்டபத்தில்  தூக்கி அமர வைத்தனர். அவர்கள்  மொழி முதியவனுக்கு  புரியவில்லை. விழித்த போது போர்த்தப்பட்ட தன் உடலுக்குள் தான்  உயிரோடிருப்பதை முதியவன் அறிந்தான். மது அருந்திக் கொண்டிருந்த பாணர்களும் விறலியரும் போதையின் உச்சத்தில்  அடித்துக் கொண்டும்  வசை பொழிந்து கொண்டும்  கூவிச் சிரித்துக் கொண்டும்  விளையாடியவாறு இருந்தனர். சில கைக்குழந்தைகள் காரணம்  புரியாமல்  கைகளை கொட்டிக் கொண்டு  சிரித்தன. முதியவனின் விழிகளில் எதையோ நினைத்து கண்ணீர்  வழிந்தது. அக்கண்ணீர் சில  கணங்களில்  அவனை சூழ்ந்திருந்த அனைத்தையும்  கரைத்தழித்தது. விசும்பலென தொடங்கிய  அழுகை ஓலமெனப் பெருகியது. விரும்பிய பொருள்  பிடுங்கப்பட்ட குழந்தை போல அவன் அழுதான். மீட்டுக் கொள்ள முடியாத அதிர்ச்சியே அழுகை. அழுந்தோரும் மீள்கிறோம் என்றொரு எண்ணம்  அப்போதும் அவன் ஆழத்தில்  எழுந்தது. முதலில்  தயங்கி நின்ற விறலியரில் ஒருத்தி அவன் அழுகை உச்சம் தொடவே தாளாது எழுந்து சென்று அணைத்துக் கொண்டாள். நீர்பெருக்கில் சிக்கிய உலர்மரமென அவளை அவன் பற்றிக் கொண்டான். ஆறடி உடல் கொண்ட குழந்தையை அணைத்திருப்பாதாக அவள் உணர்ந்தாள். தன் மகவை அணைத்திருக்கும் போது  எழும் ஊற்றெடுப்பு தன்னுள் நிகழ்வதை அவள் உணர்ந்தாள்.

"அய்யனே! அழாதே! இல்லை  அழு முழுமையாக  அழுது விடு! எத்துயரெனினும் இவ்வணைப்பு உன்னுடன்  இருக்குமென எண்ணிக் கொள். நீ குழந்தையெனில் உன்னை அள்ளி முலை சேர்த்திருப்பேன். ஆணெனில் என்னுடலுடன் உன்னுடலை இணைத்துக் கொண்டிருப்பேன். நீ என் தாதை! ஏது செய்வேன்! தாதையே உன் துயர் ஏதென நாங்கள்  அறியோம். நோய் கண்டு மருந்து சொல்ல நாங்கள்  மருத்துவர் அல்ல. பாணர்கள். நோயறியாது நோய் மூலம் தீர்க்கும்  எங்கள்  பாடல் என்கின்றனர் கேட்போர். மதிழ்யத்தின் அரசன் செவிகளில்  முதலில்  ஒலிக்க வேண்டுமென்றே இப்பாடலை இயற்றி பல காத தூரம்  நடந்தோம். என் தாதையே இன்று அறிகிறேன். அவன் இதனை முதலில்  பெற தகுதி அற்றவன். உன்னிடம்  வைக்கிறோம். உன் குன்றாப் பெருந்துயரை எங்கள்  அழியா சொற்கள்  நீக்கி விட முயலும். முயன்று முயன்று ஆயிரமாயிரம்  ஆண்டுகளாய் தோற்றுக் கொண்டிருக்கின்றன எங்கள்  சொற்கள். இருந்தும்  நாங்கள் முயல்கிறோம். நிழலை பிடிக்க ஓடும்  உடலென உலகின் துயர் பின்னே ஓடுகின்றன எங்கள்  சொற்கள். பாணர்களே! விறலியர்களே! எழட்டும்  நம் கிணைகளும் துடிளும்! தாதையின் தூய துயர் போக்க" என்றவள் சொன்ன பின்னே தன் சொற்களை எண்ணினாள். ஏது சொன்னோம் என அறியாதவளாய் விழி திருப்பினாள். முது விறலி கண்களில்  கண்ணீர்  வழிய  நின்றிருந்தாள்.

அழுகை குறைந்து விம்மல்கள் அடங்கி உடல் தளர்ந்து பாடலை கேட்கத் தொடங்கினான் அரிமாதரன். விறலியின்  குழந்தை அவன் மடியில்  இருந்தது.

Friday 29 July 2016

பெருஞ்சுழி 42

வெங்காற்று வறண்ட மதீமத்தை அழித்து எழுதத் தொடங்கியது. ஆதிரையைக் கூடியவனும் அவன் மேல் விழுந்த பன்றியும் மணலால் உண்ணப்படுவது போல்  மறைந்து கொண்டிருந்தனர். ஆதிரை நடந்தாள். விரிந்த கூந்தலும் வெறி மின்னும்  விழிகளுமான ஆதிபுரம்  நோக்கி நடந்தாள். எதிர் நின்று வரவேற்றார்  ஆதிபுரத்தின் தலைவர்.

"என்னைக் கூடியவன் இறந்தான்" என்றாள் சிவந்த விழிகளில்  கனல் தெறிக்க.

"கருமேனியன் கைக்குழந்தையின் இதழ் சிரிப்புடையோன் வலுத்து விரிந்த மார்புடையோன் காட்டின் அந்தரங்க மணம் பரவிய உடலுடையோன் என் வழியாகவே பெண்ணை அறிந்தவன் இறந்தான். துள்ளி ஓட நினைத்த கரும்பன்றியை குத்திய எடை மிகுந்த ஈட்டி ஒன்று  என்னவனின் கழுத்துடைத்து தொண்டை முழை வழியே வெளியேறியது. அவன் இறந்தான். என்றென்றைக்குமாக இல்லாமல்  ஆனான். ஏன்? எட்டு நாழிகை  நேரம்  மட்டுமே  எனக்கென வாழ்வு வகுக்கப்பட்டுள்ளதா?" என தணியாமல்  கேட்டாள் ஆதிரை.

"ஆணையிடு தாயே! எய்தவனின் உடல் கிழித்து உள் அள்ளி உன் காலடியில் எறிகிறேன். எழட்டும்  நம் படை" என்றவாறே  ஆதிரை  முன் கை கூப்பி நின்றான்  முதிர்ந்த இளைஞன் ஒருவன்.

அதுவரை  மௌனம்  காத்த ஆதிபுரத்தின் தலைவர்  தலை நிமிர்ந்தார். "இறந்தவன் என் மகன்  சுனதன். சுனதரைப் போலவே வாழ்வினை வகுத்துக்  கொண்டவன். இறையினால் இறப்பான் என்றெண்ணியே அவனை மறந்திருந்தேன். அவனை நினைத்து என்னுள்  நிறைவு மட்டும்  ஊறியிருந்தது. முப்பதாண்டுகள் வாழ்ந்தவனை ஆதிபுரம்  முழுமையாகவே மறந்திருக்கிறது. இதுவே அவன் பெற்ற பேறென எண்ணிக் கொள்கிறேன். பழுத்த இலை மரம் நீங்குவது போல் என் மகன்  மண் நீங்கியிருக்கிறான்" எனும்  போது நிதானமாக ஒலித்துக்  கொண்டிருந்த அவர் குரல் ஓலமானது "இரும்பினால் அவன் இறந்தான்  என்பதை ஒப்ப மறுக்கிறதே என் அகம். இல்லை. அவன் முழுதாய்  இறக்கவில்லை. என்னுள்  என்றும்  எஞ்சியிருப்பான் என் சுனதன்" என்றவர் மயங்கி  மண்ணில்  விழுந்தார்.

ஆதிரையிடம்  ஆணையிடச் சொன்ன  இளைஞன் மீண்டும்  அவள் முன் வந்து நின்றான்.

"எதை நோக்கி ஆணையிடச் சொல்கிறாய்? சுனத வனம்  நோக்கி முதலில்  வந்த மாசறியான்  மண்ணின்  கொடுமைகள்  தாழாமல் வனம் அடைந்தவர். அங்கே தொடங்கியது நம் செயலின்மை. வனம்  நீங்கியது சுனதர் மட்டுமே. நாம் வாழவே தன் வாழ்வை அழித்துக் கொண்டவர் சுனதர். ஆனால்  நாம் நிலத்தைக் காணாமல்  இங்கு நிலை பெற்று  வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னவன் நம் அனைவரிலும் தூயோன். அவனைக் கொன்றது நிலத்தின்  நேர் அறங்களில் ஒன்றே. உங்களை  மனிதர்கள்  என்றே நிலம்  இன்று ஏற்காது. உங்கள்  மேல்  வெறுப்புமிழும் உங்களை வதைக்கும்  வதைத்து முன்னேறும்  அதன்பின்  உங்களிடம்  எஞ்சியிருக்கும்  இறுதி நம்பிக்கையும்  தகர்ந்து  அழியும்  நோக்கில் உங்களிடம்  கருணை காட்டும். நிலத்தின் மறத்தினை கானகத்தின் அறம் எதிர்கொள்ள முடியாது. ஒன்று திரள எதிர்த்தடிக்க  நீங்கள்  கற்கிறீர்கள். ஆனால்  உங்களை உயர்வென நீங்களும்  தாழ்வென அவர்களும் எண்ணும்  வரை மீட்பென்பதே கிடையாது. மலை விட்டிறங்கும் காட்டாற்றின் வேகத்துடன் நிலத்தில் அணைவது மட்டுமே  உங்கள்  முன்னிருக்கும் வழி. முதிர்ந்து கருத்த நஞ்சொன்று உண்டு உங்கள்  உடலில். வீரமென்றும் பொறுத்தல் என்றும்  உங்களுள் நடிப்பது அந்நஞ்சே. சுனதனுக்காக அல்ல. சுமதனிக்காக சுகத்யைக்காக ஆதிரைக்காக நான் எழுகிறேன். நிலத்தில்  எத்தனை  கீழ்மைகள்  நிகழ்ந்தாலும் இயங்குவதாலேயே அது மேலானது. உங்கள்  எண்ணங்கள்  எவ்வளவு  மேன்மை கொண்டிருந்தாலும் செயலின்மையாலே நீங்கள்  கீழானவர்கள். அத்தனை கீழ்மைகளையும் நின்றழிக்கும் நெருப்பென என்னை அறிந்தவன் என்னுள்  இருக்கிறான்" என்றவள் மீண்டும்  அவ்விளைஞனை நோக்கி "நான்  ஆணையிடுகிறேன். ஆழிமாநாடு  சுனதனை அறிய. நான்  ஆணையிடுகிறேன்  ஆழிமாநாடு  பேரன்னை ஆதிரையை வணங்க. நான்  ஆணையிடுகிறேன்  என் துயரை இந்நிலம்  அறிய. முடியுமா?  முடியுமா?" என எரிவிழியுடன் அவனை நோக்கி நகர்ந்தாள்  ஆதிரை.

அவன் அஞ்சவில்லை. பின்னகரவிவ்லை. திடமான  குரலில் "அன்னையே! பிறந்தது முதல்  நிறைவென எதையும்  உணராமல்  வளர்ந்தவன் நான். ஆதிபுரத்தில்  உள்ளும் புறமும்  என்னை வெறுக்காதவர் இல்லை. இங்கிருக்கும்  ஒருவராலும்  என்னை விரும்ப முடியாது. இவர்களினும்  உடல் வலு மிகுந்தவன் என்பதாலேயே இவர்கள்  என்னை வெறுத்தனர். என் சொற்கள்  ஆணையாக மட்டுமே  இவர்கள்  முன் எழுந்தன. முதல் முறையாக  உன் முன் என் சிரம் பணிந்தது. உன் மீது  அம்பெய்தவன்  மகோதவன்  அல்ல. நானே. முதலம்பு உன்னை தீண்டிய பிறகே அறிந்தேன்  என் கை உயிர் பறிக்கும்  அம்பை எடுக்கவில்லை  என. என் ஆழம் அன்றே அறிந்து விட்டது உன்னை. என்  அன்னையை. இப்போது  இங்கிருக்கும்  அத்தனை  அன்னையரும்  என்னை சிறுமகவென அள்ளித் தூக்கி முலையூட்ட விழைகின்றனர். அத்தனை தந்தையரும் என்னை மார்போடு இறுக்கிக் கொள்ள விழைகின்றனர். தன்னுள் தாய்மையை உணராத ஆண் வெறும்  ஆயுதம்  மட்டுமே. தாய்மை என்பதென்ன? ஒரு தவிப்பு. எதையும்  தனித்து விடாது தன்னுடன் இணைத்துக்  கொள்ளும்  கனிவு. துயர் துடைக்க  எழும்  பேரன்பு. அத்தவிப்பினை அக்கனிவினை பேரன்பினை என்னுள்  உணர்ந்தேன். இன்றுரைக்கிறேன். உன் சொல் தீண்டும்  இடத்தில்  இந்த கணபாரனின்  வில் தீண்டும். உன் மொழி படும்  இடத்தில்  என் மழு எழும். உன் விழி காட்டும்  எல்லையை என் புரவி வெல்லும். உன் சித்தத்தில்  எழும் நெருப்பை என் சிரம்  ஏற்கும்" என்றான்.

மௌனம்  கணத்தது ஆதிபுரத்தில். ஆதிரை மென்மையாக சிரித்தாள். குளிர் காற்றென அச்சிரிப்பு மக்களிடையே  சிலிர்த்துக் கிளம்பியது. கண்களில்  நீர்  வழிய வெண்பற்கள் வெளித் தெரிய வெடித்துச் சிரித்தாள்  ஆதிரை. எதிரே நின்ற கணபாரனும் சிரித்தான். எரி துளிபட்ட உலர் காடென கணத்துப் பரவியது அச்சிரிப்பு.

அவையீரே! அறிக! அன்னையின்  சிரிப்பு துயரின் உச்சத்தில்  எழுந்தது. அது இன்னும்  அணையவில்லை. பிரமித்த விழிகளுடன்  விகந்தரும்  கணபாரரும்  பாணனை பார்த்து  அமர்ந்திருந்தனர்.

Thursday 28 July 2016

பெருஞ்சுழி 41

சகந்தர்  விவாதங்கள்  முடிந்து இறுதியாக  எழுந்தார்.அவை அவர் கூற்றினைக் கேட்க முற்றமைதி  கொண்டு நிலைகொண்டது.

"சுனத சாசனம் மண் நிகழ்ந்த ஒரு பேரற்புதம் என அவையோர் பலர் உரைத்தனர். அத்தகைய  வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லையெனினும் அவர்கள்  கூற்றினை  நான்  மறுக்கவுமில்லை. ஈராயிரம்  ஆண்டுகள்  கடந்த மிகத் தொன்மையான நூல்  சுனத சாசனம். தன் உடல் வழியே நிலங்களை  அறிந்ந சுனதனின்  தெளிந்த சொற்களை கூழாங்கற்கள் மத்தியில்  வைரமென என் அகம் கண்டுகொள்கிறது. சுனத  சாசனம்  முழுவதுமாக சுனதனால் இயற்றப்படவில்லை. ஆதிரையும்  சுனத சாசனத்தை  முழுமை கொள்ளச் செய்யவில்லை. அதிகபட்சம்  எழுநூறு  ஆண்டுகளுக்கு  முன்னர்  தான்  சுனத சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நாடுகள்  உருவாகி வந்தன. எனவே சுனத சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நூற்றியிருபது  தேசங்களும்  உருவான பின்னரே அப்பெயர்கள் சுனத சாசனத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள்  பேராசான்  சுனதரின் நோக்கம் அரசமைப்பதோ ஆட்சி செய்வதாகவோ இருக்கவில்லை  என்பதற்கு  அவர் ஆழிமாநாட்டினை உடலை உயிரெனப் பிண்ணி ஆய்ந்த நிலவியல் ஆய்வுகளே சான்று. நிமங்க மரபு சுனதரின் நில ஆய்வுகளை முழுமையாக தொகுத்துள்ளது" என முடித்தார்.

ஆதிரை  புகிந்தத்தின்  அரண்மனைக்கு வருகை புரிந்தாள். சுனதபாங்கத்தின்  எல்லையில்  இருந்த சிற்றூர்களில் நடந்த பூசல்களில் சவில்யத்தின்  வீரர்கள்  சிலர் கொல்லப்பட்டனர்  என செய்தி வந்தது. மோதமதியின்  புதல்வர்களை  விடுவிக்கவும் அன்றைய தினம்  உத்தரவு  பிறப்பித்தாள்.

சுனதபாங்கத்தின் எல்லைக்குள்  கணபாரரின்  புரவிப்படை நுழைந்த  போது  சுனதபாங்கத்தின்  படைத்தளபதி  காமிலர் அவரை எதிர் கொண்டு  வரவேற்றார். நான்கு  அணித்தேர்களில் சிறந்த  வீரர்கள்  தேரோட்டிகளாகவிருக்க மாரதிரனின்  புதல்வர்கள்  கம்பீரமாக  வந்தனர். அதிலிருக்கும்  நகையாடலை உணராது  அவர்களுள்  தெரிந்த  கம்பீரம்  காமிலரை கோபமுறச்  செய்தது.  பொதுவாக இளவரசிகளையும் முதிய  அமைச்சர்களையும் பாதுகாக்கவே சிறந்த  வீரர்களை தேரோட்டிகளாக்குவது வழக்கம்.  தொலைவில்  இரு குதிரைகள்  பூட்டிய  தேர் சகடங்களை காமிலர் கேட்டார். சரளை கற்கள் நெறிபடும் ஒலியுடன் விரைந்து வரும்  அத்தேர் வன்தோளனுடையது என ஊகிக்க அவருக்கு  நேரமெடுக்கவில்லை. இரு தேச வீரர்களும்  அதனை உணரத் தொடங்கி விட்டனர். ஒவ்வொரு  வீரனின்  விழியிலும் ஒளி பற்றி ஏறுவதை காமிலரும் கணபாரரும்  உணர்ந்தனர். மோதமதியின்  புதல்வர்கள்  தவிர அங்கிருக்கும்  அத்தனை உடல்களும்  முறுக்கேறின. மார்பு  வரை  கருந்தாடி அலையடிக்க அடித்து வார்த்த நிமிர்ந்த நெஞ்சுடன் அருளும்  வெறியும்  வழியும்  விழிகளுடன் மேலாடை ஏதுமின்றி தேரை விட்டிறங்கி கணபாரரை நோக்கி வந்தான்  வன்தோளன்.

"ஆழிமாநாட்டின்  பெருவீரரை சவில்யத்தின்  ஒப்பற்ற தளபதியை வணங்குகிறேன்" என வன்தோளன்  கணபாரரின்  காலடியில்  முழு உடலும்  மண் தொட வணங்கி எழுந்தான். காமிலர்  உட்பட  அங்கிருந்த வீரர்கள்  அனைவரும்  எழுச்சி கொள்வது அவர்களின்  விழிகளில்  தெரிந்தது. தன்னை விட உயரமான  வன்தோளனை கணபாரர்  தோள் பற்றித் தூக்கி மார்புடன்  அணைத்துக்  கொண்டார். குனிந்த அவன் தலையில்  கை வைத்து "நீண்ட புகழுடன்  இரு மைந்தா" என வாழ்த்தினார். மோதமதியின்  புதல்வர்கள்  வன்தோளன்  தங்களருகே வருவான் என ஆவலுடன்  நோக்கி நின்றனர். யாரையும்  திரும்பி நோக்காது  அதே வலுவடிகளுடன் மீண்டும்  தேரில்  ஏறிக்கொண்டான்.

கணபாரர்  சுனதபாங்கத்தின்  அரண்மனையை அடைந்த போது எல்லைப் பூசல்கள்  பெருகியிருப்பது குறித்து தகவல்கள்  சவில்யத்தை எட்டியிருந்தன.

"கணபாரர்  சுனதபாங்கம் சென்றிருக்கும்  சமயம்  உகந்ததென்றே இந்நேரம்  பூசல்களை துவங்கி வைக்கின்றன அந்த முக்கூட்டு நாடுகள். நம்முடைய  சில கிராமங்களை இழக்க நேர்ந்தாலும் அது குறித்து  இப்போது பொருட்படுத்தக் கூடாது. கணபாரர்  திரும்பி வரும்  வரை சுனதபாங்கத்தின்  எப்படையையும் சவில்யம்  எதிர் கொள்ளப் போவதில்லை" என்று அவையில்  அறிவித்தாள் ஆதிரை.

சவில்யத்தின்  முக்கிய  வணிக தளங்கள்  முக்கூட்டு நாடுகளின் படைகளின் வசமாகிக் கொண்டிருந்தன. ஆதிரை திகைத்து  நின்றாள். மோதமதியின்  விழிகளில்  மீண்டும்  அரசியாகும் கனவு மின்னியது.

விகந்தரின் அவையில்  மீண்டும்  ஒரு பாணன்  பாட எழுந்தான். கணபாரரும்  விகந்தரும் பாடலில்  மகிழ்ந்திருக்க வன்தோளன் தலைமையில்  படை ஒருக்கங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆதிரை கணபாரருக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.