Thursday 30 June 2016

பெருஞ்சுழி 13

கம்பளிப் படுதாக்கள் விரிக்கப்பட்ட கூடாரத்தை நோக்கி சுனதன்  நடந்தான். கூடாரத்திற்கு வெளியே வெற்றுடலுடன் சிலரைப் படுக்க வைத்து அரக்கினை உருக்கி  மார்பிலும் தொடையிலும் முத்திரையிட்டனர். வண்டல் மணல் பரப்பப்பட்ட வலுப்போர்  கொட்டடி பகலிலும்  இருண்டிருந்தது. தீப்பந்தங்களின்  சடசடப்பு உள் நுழைந்த போது சுனதனுக்கு  ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தியது. பின்னிருந்து ஒரு கை அவனை தள்ள முயன்றது. தள்ளிவிடும் எண்ணத்தோடு அவன் மீது கொடுக்கப்பட்ட விசை அவனை அசைக்காதது கண்டு தள்ளியவன் விழி விரித்தான்.

"உன் பெயர்?" என அங்கு வந்த கொட்டடிப் பணியாள் கேட்டான்.

"சுனதன்"

போர்முறைகளை அறிவிப்பதற்கு  மணி ஒலித்தது. கலைந்து நின்றவர்கள்  ஒவ்வொருவராய் வந்தமர்ந்தனர். ஐம்பது  பேராவது அங்கிருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் உடல் பருத்த சிறியவர்கள். அவர்கள்  கண்களில்  பயமும்  நடுக்கமும்  தெளிவாகவே தெரிந்தது. கொட்டடிப் பணியாள் அறிவிப்பினைத் தொடர்ந்தான்.

"உங்களுக்கு  இரு வாய்ப்புகள் உள்ளன. எதிர்  நிற்பவனை அரை நாழிகைக்குள்  கொல்லுதல் அல்லது  ஒரு நாழிகைக்குள்  வீழ்த்துதல். அரை நாழிகையில்  கொல்பவன் மாவலியரின் பிரதான  சேனைகள் ஒன்றில்  வீரனாக  சேர்க்கப்படுவான். ஒரு நாழிகையில்  வீழ்த்துபவன் உப சேனைகள் ஒன்றில்  வீரனாகலாம். தோற்று உயிரோடிருப்பவன் மார்பிலும் தொடையிலும் முத்திரை பெற்று இறக்கும் வரை மாவலியத்தில் ஊதியம் இல்லா ஊழியம் புரிய வேண்டும். வென்றும் அங்கத்தில் குறைபாடு ஏதேனும்  தெரிந்தால்  அவன்  அக்கணமே கொல்லப்படுவான்" என்றான். "இன்று  இருபத்தைந்து பொருதல்கள்  இக்களத்தில் நடக்கும். முதல்  பொருதலுக்கு எழுபவன் எழலாம்" என்றான்.

மாவலியர் தன் தகப்பனைக் கொன்று  ஆட்சியமைத்து இருபது ஆண்டுகளே  ஆகியிருந்தன.இருபது  மந்திரிகளும்  அவர் மஞ்சம் நுழையும்  பெண்ணும்  அவரிடம்  போர்  பயிற்சி  பெரும்  புதல்வர்களும் மட்டுமே  அவனைக்  காண  முடிந்தது.நெருங்க முடியாததை  மேலும்  அந்நியமாக்குவது  அதன்  மீது  உருவாக்கப்படும்  பயம்.  மாவலியர் எங்குமில்லை. அதனாலேயே  எங்குமிருந்தார். அணுக  முடியாததை  விட  அணுக்கமானது எது?  இருப்பினை  விட  தொலைவும் அமைதியும்  பெரும்  பயத்தை  உருவாக்கும்.  மாவலியரை  திருப்தி  செய்வது  போரும்  செல்வமுமே.  மாவலியத்தின்  மொத்த வலுவும்  திருவும்  தன்னை  நோக்கி குவியச் செய்தார்.  அதன்  ஒரு சிறு  பகுதியே  வலுப்போர்  களம்.

“நீ  என்னுடன்  நிகர்  நிற்கவேண்டும்” சுனதனை கை காட்டியவாறே பேருடல் கொண்ட ஒருவன் எழுந்தான்.

“சரி” என்று  சிரித்தான்  சுனதன்.

"தெரிதன்" என் பெயர் எனச் சொல்லி  சுனதனை இறுக்கி அணைத்தான்.

“ஏனடா  சிரிக்கிறாய்? அரை நாழிகையில் நம்மில்  ஒருவன்  நிச்சயம்  இறப்போம். உன்னைக்  கண்டதும்  உன் உடல் வலுவை  சோதிக்கவே அணைத்தேன். நீ எஞ்சப் போவதில்லை  என்பது  இப்போதே உறுதி” என்று “கலத் தலைவரே  என் போரிணை இவனே” என்றான்.

“உன்  பெயர்?” என்றான்  கலத்தலைவன். “தெரிதன்” என்று  மீண்டும் சொன்னவன் சுனதனை  நோக்கினான்.

“என் பெயர்  சுனதன்” என்ற வார்த்தையை  சுனதன்  முடிப்பதற்கு  முன்னே  அவன்  பிடரியை பிடித்து  முகம்  மண்ணில்  அழுந்த  இழுத்து தேய்த்தான் தெரிதன். விரைந்தெழுந்தான் சுனதன்.  உயிர்  விரும்பும்  ஆதிவிசை இயக்க  சுனதன்  பெருங்கல் ஒன்றை  தூக்கி  நெருங்கிய  தெரிதனை அக்கல்லுடன்  கீழே  தள்ளினான். சினம்  கொண்டவனாய் தெரிதன்  சுனதனை  நோக்கி  இரு  கைகளையும்  முறுக்கியவாறு ஓடிவந்தான்.  “என்னை  மன்னித்துவிடு  தெரிதா” என்று தெரிதனின் மொத்த  உடலையும்  அவன்  இடுப்பின்  வழியே  வலக்கையில்  வாங்கி  தலை மண்ணில்  அறையுமாறு நிலத்தில்  குத்தினான். உடலில்  தோன்றிய விதிர்ப்புடன்  தெரிதன்  நினைவிழந்தான். மீசையை  நீவியவாறே கலத்தலைவன்  “கொல் அவனை” என்றான். “இவரை நான்  எப்படிக் கொல்ல வேண்டும்  கலத் தலைவரே?” என்று  புரியாமல் கேட்டான்  சுனதன்.

விளங்கா  விழிகளுடன்  அவனைப்  பார்த்த  கலத்தலைவன் “மூடனே!   வீழ்த்திய  உனக்கு  கொல்லத் தெரியாதா? கொல் அவனை” என்றான்.

“ஆணை” என்று  சுனதன்  தெரிதனின்  கை பிடித்தபடி  உதட்டை  குவித்து  ஒளியெழுப்பினான்.  நிரத்துவன்  கொட்டடிக்குள் சீறி நுழைந்தான். கலத்தலைவன்  காட்சியினை  உணருமுன்னே தெரிதனை  புரவியின் மேல் வீசி தானும்  பாய்ந்தேறினான்  சுனதன். நிரத்துவனை  வில்லும்  ஈட்டியும் கொண்டதொரு குறும்படை  துரத்த  தொடங்கியது. சுனதன்  தன்  பாதையை  முடிவு  செய்தான். மாவலியரை மண் கொண்டு வரும்  பாதையது.

Wednesday 29 June 2016

பெருஞ்சுழி 12

பாலை கடந்ததன் தடங்கள் தென்படத் தொடங்கின. மேற்கிலிருந்து  பறவைகள் கலைந்தெழும் ஒலி கேட்கத் தொடங்கியது. சுனதன்  தன் மனதில்  ஒரு இதம் பரவுவதை உணர்ந்தான். அதற்கென  தன்னை நொந்து கொண்டான். பாலையும்  சோலையும் வேறுபடுவதை ஆழ்மனம்  இன்னும்  உணர்கிறது என்ற எண்ணம்  அவனை துணுக்குறச் செய்தது.

பசும் பரப்புகளைக் கண்டதும் நிரத்துவன்  துள்ளத் தொடங்கியது. மதீமம் என்றொரு ஆறு பாலையைக் கடந்ததும்  தொடங்குமென மாசறியான்  சொல்லியிருந்தார். அவ்வாற்றுக்கு கரையெடுக்கும் பணிகள்  நடந்து கொண்டிருப்பதை  சாலைகள்  காட்டின. அடர் கருப்பு நிறத்தில்  திட்டுகளாய்  ஒட்டியிருந்தது  மாட்டு வண்டிகளில்  கொண்டு செல்லப்பட்டது கரை மண். பொழுதடைந்திருந்ததால் சாலை வெறிச்சிட்டுக் கிடந்தது.  ஒரு காத தூரம்  பயணித்த பின் நிரத்துவன்  இடப்பக்கம்  தலை திருப்பினான். நினைவுகளில்  ஆழ்ந்திருந்த சுனதன்  இடப்பக்கம்  நோக்கினான். கொதிக்கும் மீன் வாசம் எழுந்தது. சாலையில்  இருந்து  பிரிந்த ஒற்றையடிப் பாதையின்  மீது நிரத்துவன்  நடந்தது. சற்று மறைவிடம்  நோக்கி நிரத்துவனை  ஒதுக்கி  அங்கிருந்த ஈச்ச ஓலைக் குடிசைகளை கவனித்தான்  சுனதன.

இரண்டு பெரும் அடுப்புகள்  எரிந்து கொண்டிருந்தன. கரிய பெண்கள்  சிலர் அடுப்பை சுற்றியமர்ந்து ஊதுகுழல்களால் மூட்டிக் கொண்டிருந்தனர். சிறு குழந்தைகளை தூக்கி எறிந்து சற்றே பெரிய குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருந்தன. "யேய் ய்யேய்" என கத்திக் கொண்டே விண்ணில்  பறந்தன குழவிகள். பனங்கள் பானைகளில் இருந்து அள்ளிக் குடித்து இளிவரல்  பேசிக் களித்திருந்தனர் இளையோர். நிரத்துவன்  அவர்களை நெருங்கியது.

சுனதனைக் கண்டதும்  உடலில்  இயல்பின்மை  பரவ பெண்கள்  எழுந்து உடல் ஒடுக்கினர். வாயைத் துடைத்துக்  கொண்டு கள் அருந்தியவர்கள் எழுந்து குறுகி நின்றனர். சுனதன்  ஒரு நொடி  தளர்ந்தான்.

"இல்லை  நான் காவலன் அல்ல. வழிப்போக்கன். அஞ்ச வேண்டாம்" என நிரத்துவனை  விட்டிறங்கினான்.

"வழிப்போக்கனா?"என்று கேட்டவாறே  ஒரு இளைஞன்  அவனைத் தொட்டான். பின் மோவாயில் கை வைத்து "ஏய் மவிந்தா இவர் தான்  சுனத மகானாக இருப்பாரோ?".

"ஆனால்  அவர் பல்லாயிரம்  வருட வயதுடையவர் என்கின்றனர். இவர் இன்னும்  இளமை மாறவில்லை. "

"மகான்கள்  அப்படித்தான்  இருப்பார்கள். நாள் முழுவதும்  அவர்களால்  புணர முடியும். பின் உலகைப் படைப்பதானால் புல்லில் இருந்து புலிகள்  வரைப் புணர்ந்தாக வேண்டாமா? உன்னைப் போல் ஒன்றிரண்டுக்கே தளர்ந்தால் உலகை எப்படிப் படைப்பது. அவர்கள்  மூப்படைவதே இல்லை. சரிதானே வழிப்போக்கரே?" என்று சுனதன்  முகத்துக்கு  நேரே கை நீட்டினான்.

"சரிதான்" என முறுவலித்தான் சுனதன்.

"அவர் பிறந்த கதை சொல்லட்டுமா உமக்கு?" என்றான்  உற்சாகம்  ஏறியவனாய்.

சுனதனும்  கதை கேட்க அமர்ந்தான்.

"சுமதனி  எட்டு வயது முதலே கனவில்  நாகங்களைக் காண்பவள். உதிர வாயில்  திறந்து ஒரு மண்டலம்  கூட காத்திராமல் அவள் தந்தை அவளை மாசறியானுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவள்  கொதித்துப் போய் காத்திருக்க அவன் மக்கள்  வருந்துவதாகவும் தன்னால்  ஒன்றும்  இயற்ற முடியவில்லை  என்றும்  அழுதான். 'சரி ஆற்ற வேண்டியது  ஆற்றலாமே' என அவன் கரம் பற்றினாள்  சுமதனி. அவனும்  அவள் கரம் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தத் தொடங்கினான். சுமதனி  பாதியிலேயே தூங்கிவிட்டாள். அதை கவனிக்காமல்  'என்ன சரிதானே?' என்றான்  மாசறியான். என்ன கேட்டான்  எனப் புரியாமல்  'சரி சரி ' எனச் சொல்லி  கச்சையை அவிழ்க்கப் போனாள் சுமதனி. அப்போதுதான் நாடு கடந்து காடு செல்வோம்  எனக் கேட்டிருக்கிறான் என அவளுக்குப் புரிந்தது.

மாசறியானை விட விரைவாக  சுமதனி  நடந்தாள். செல்கிற வழியில்  மாவலியன்  என்றொரு  வீரனைப் பற்றிக் கேட்டாள். கனவிலும்  அவன் பெயர்  உளறினாள். பொறாமை தாளாமல்  அவளைப் புணர்ந்தான் மாசறியான். அவள் மாவலியனையே நினைத்திருந்தாள். அவளின்  கனவையும்  அவன் பொறாமையையும் ஒருங்கே நிகர்க்கும்  விதமாய் இறைவனே வந்து பிறந்தான். இறைவனுக்கே குழப்பம்  எழுகிறது  தான் பிறந்தது  மாவலியனுக்கா மாசறியானுக்கா என. தெளிவடையும் போது சுனதர் மாவலியனையோ மாசறியானையோ வதம் புரிவார். அது வரை கள்ளுண்டு களித்திருப்போம். கண் மூடி பொறுத்திரு...." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதை சொல்லி சரிந்தான்.

சுனதன்  சிரித்துக்  கொண்டிருந்தான். ஒவ்வொருவராக உடல் தளர்ந்து  உறங்கினர். விளக்கொளியில்  சுனதன்  முகம்  மின்னியது.

"மைந்தா" என்றவாறே அருகில் வந்தாள்  பேருடல் கொண்ட ஒரு அன்னை.

"அம்மா" என்றான்  சுனதன்.

"முதன்முறை  தாயைப் பிரிந்திருக்கிறாய் அல்லவா?" என்றாள் அன்னை.

சுனதன்  திடுக்கிட்டான். "எப்படி  அறிவீர்கள்? " என்றான்.

"மைந்தர்கள்  அனைவருக்கும்  முகம்  ஒன்றுதான். உறங்கு" என அவன் தலை கோதிச் சென்றாள் அன்னை. சுனதன்  ஆழ்ந்து உறங்கினான். மறுநாள்  புத்துணர்வுடன்  அவர்களிடம்  விடைபெற்று பயணத்தைத் தொடர்ந்தான்.

சுனதன்  கடற்கரை  பாதையை  தேர்ந்தெடுத்தான். சதுப்புக் காடுகளின்  வழியே  சோர்வுற்று  நிகழ்ந்தது  அவன் தனிப்  பயணம்.  மலைக்காடு அகன்றதுமே  அவனுள்  எப்போதும்  குடியிருக்கும்  குதூகலம்  மறையத் தொடங்கியது. குலம்  நீங்கியதாலோ அறியாதது  நோக்கிச்  செல்வதாலோ தோன்றும்  பயமல்ல அது. இருப்பினை  தக்கவைத்துக்  கொள்ள  நினைக்கும்  வலிமையற்றவர்களை  சந்தித்ததால்  எழுந்த  சோர்வு  பெறுகி மனம் நிறைந்திருந்த  குதூகலத்தை  முற்றாக  அழித்தது. அவன்  குதிரை  நிரத்துவன்  மட்டுமே  சுனதனுக்கு நிம்மதி  அளிப்பதாய் இருந்தது. ஒரு  வருடம்  அவன்  பயணித்த  பின்பு  மாவலியம்  தொடங்கும் பிரதான  நிலப்பகுதியை  அடைந்தான்.

“உன் மனைவியை  புரவிச்சேனன்  வீட்டிற்கு  அனுப்பினானா? இல்லை  இன்றும் அவனுடன்  தங்குகிறாளா?” என்று  சுனதனின்  கடிவாளம்  இழுத்து  நிறுத்தி  ஒருவன்  கேட்டான்.
அடிமை ஊழியம்  தவிர வாழ்வில்  ஒரு நொடி கூட  தனக்கென  இல்லாதவன் என்பதை  அவன்  விழி  காட்டியது.

“மூத்தவரே என் பெயர்  சுனதன்  என்பதாம். நீங்கள்  சொல்கிறபடி எனக்கு  மனைவி  யாருமில்லை.” என்றபடி  குதிரையை  விட்டிறங்கினான்.

“ஓ அப்படியா  அழகிய  செம்புரவியை பெற பலர்  மனைவியை  சேனன் மனைக்கு  அனுப்புவார்கள். நீயும்  முகத்தில்  முடி  மண்டி வெற்றுடலுடன் நிற்கிறாயா அதனால்  கேட்டேன்” என்றான்.

“மாவலியம்  நோக்கிச்  செல்கிறேன். இளைப்பாறு மண்டபம்  ஏதேனும்  இவ்விடம்  உண்டா?” என்று  சுற்றி  நோட்டமிட்டவாறே  கேட்டான்  சுனதன்.

ஏளனமாக  நகைத்தவாறே “நீ  வடக்கில்  இருந்துதானே  வருகிறாய்? மூடா!மாவலியம் நாற்பது காத தூரத்திற்கு  முன்னே  தொடங்கிவிட்டது.  போ!நீ பார்க்கவும்  வலுவானவனாகவே தெரிகிறாய். இன்னும்  சற்று தூரம்  முன் சென்றால்  வலுப்போர் களம்  தயாராக  இருக்கும்.  அங்கு  நிச்சயம்  உன்னை  விடமாட்டார்கள்.” என்று  அவன்  நகைத்தான்.

“வலுப்போர் களமா?” என்றான்  சுனதன்.

“ஆம்  நீ அங்கு  கட்டாயப்  போரில் ஈடுபட  வேண்டும். உடல்வலு கொண்ட  ஒவ்வொருவனும்  தனக்கே  படைக்கப்பட்டதாக மாவலியர் அருளியுள்ளார்.  அவர்  இறைச்சேனைக்கான வீரர்களை  தேர்ந்தெடுக்கும்  அரும்பணியே வலுப்போர். வென்றால்  மாவலியரின் சேனையில்  உயிர் பிரியும்  வரை  போரிடவேண்டும்.  தோற்றால் உயிர்  போகும்  வரை  மாவலியத்தில் தொண்டூழியம்  புரிய  வேண்டும். உன்  போன்ற  உடல்  கொண்டவர்களுக்கு மாவலியத்தில் இறப்பு  ஒன்றே மீட்சி.” என்றான்  சிரிப்புடன்.

“நான்  மறுத்தால்” என்றான்  சுனதன்.

“மறுப்பிற்கான அசைவு  எழுந்தால்  அடுத்த  அறுபது  நாழிகைகளில்  உன் உயிர் போகும். ஆனால்  அந்த  நாழிகைகளில்  நீ அனுபவிப்பதை  பார்ப்பவன்  அவன்  வாழ்நாளில்  மறுப்பு  என்பதை சிந்திக்கமாட்டான். முப்பது  நாழிகை  முடிகையில்  அரை நாழிகை  இடைவெளி  விடுவார்கள். பெரும்பாலும்  அந்நேரத்தில்  தண்டனை  பெற்றவன் நிச்சயம்  தற்கொலை செய்து  கொள்வான்.” என்று  கூறியவன்  குரலில்  நடுக்கம்  தெரிந்தது.
சுனதன்  நிரத்துவனை  நீங்கினான்.  அவன்  மனவோட்டம்  புரிந்தவனாய் நிரத்துவன்  மறைவிடம்  நோக்கிச்  சென்றான்.

களிற்று  மத்தகங்களோடும்  சிம்ம  உகிர்களோடும்  போரிட்டிருந்த  சுனதன்  ஒரு  மனிதனையும்  வெல்லும்  நோக்கத்தோடு  தீண்டியது  கிடையாது.  இடைசுற்றியிருந்த  ஒரு  துணியை  மார்பில்  மூடி  சடைமுடியும்  நீள்தாடியும்  புரள  வலுநடை வைத்து  வலுப்போர்  நடைபெறும்  கொட்டடி நோக்கிச் சென்றான்.

Tuesday 28 June 2016

பெருஞ்சுழி 11


சகேரீதம் வீழ்ந்த பிறகு மாவலியருக்கு எதிர்ப்பென ஏதும் எழவில்லை. சகேரீதத்தை துணைத்த அத்தனை கூட்டரசுகளும் பணிந்தன. மாவலியத்தின் எல்லை விரிந்த வண்ணம் இருந்தது . அடர் கானகங்களில் வாழ்ந்த குடிகள் வரை சென்று தொட்டது மாவலியரின் பெரும் சேனை. எதிர்ப்பவர்கள் மறுமொழி இன்றி கொன்று வீழ்த்தப்பட்டனர். குடி முறைகள் பகுக்கப்பட்டன. ஊர் எல்லைகள் வகுக்கப்பட்டன.
மாவலியத்தை கட்டுவதொன்றே கடனென உழைத்தனர் மக்கள். தீருந்தோறும் மேலு‌ம் உறிஞ்சவே விழைவேறும் என்பதைப் போல வலுவிழந்தவர்களை மென்று உமிழ்ந்தது மாவலியம். மாவலியர் இருக்கும் போதே இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தார். அமைச்சர்களும் அணுக்கர்களும் மனைவிகளுமன்றி மாவலியரை கண்டவர் கிடையாது. ஆனால் பிறக்கும் ஒவ்வொரு கருவும் அப்பெயர் கேட்டு திகைத்தது. சோர்ந்தது. தான் பிறந்ததின் நோக்கம் தான் உருவாவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென அறிந்து அரற்றியது. அவர்களின் கதைகளிலும் கனவுகளிலும் மாவலியரே நிறைந்தார். கனவில் ஒவ்வொரு பெண்ணும் நூறு முறை அவரைப் புணர்ந்தாள். ஒவ்வொரு வீரனும் ஆயிரம் முறை அவரைக் கொன்றான். ஒவ்வொரு மதியாளனும் கோடி முறை அவரை வென்றான்.
சிற்றூர்களுக்கு செம்மண்ணிலும் நகரத் தெருக்களுக்கும் பெரும்  பாதைகளுக்கும் கருங்கல்லிலும் சாலைகள்  அமைக்கப்பட்டன. நாளும்  வளர்ந்தது மாவலியம். நிர்வாக முறைகள் இறுகின. அழுதும் அரற்றியும் உயிர்விட்டனர் மக்கள். உழைத்து வலி தாளாமல் உயிர்விடுவதே ஒரு சடங்கென்றானது சில மலைக்குடிகளில்.தண்டனை  என ஒரு விழி தோண்டி எடுக்கப்பட்ட இளைஞன் தன் இறப்புக்கு விறகுகள் அடுக்கி  எரிபடுக்கை அமைத்துக்  கொண்டிருந்தான். அவன் இடக்கண் இருந்த குழியில்  குருதி வழிந்து கொண்டிருந்தது. இலுப்பை  ஊற்றி எரிபடுக்கை அவனுக்கென ஒளிர்ந்து காத்திருந்தது. எரி புகுந்த பின் எழுந்து விடக்கூடாது  என்பதற்காக  தன் கால்களை  கட்டிக்  கொண்டான். ஊர் மூத்தோர்  இருவர் அவன்  கைகளைக் கட்டினர். இல்லாத இடவிழியில் சீழுடன் குருதியும்  வல விழியில்  நீரும்  வழிந்தன. பெண்கள்  ஆடைத் தலைப்பால் வாய் பொத்தி அழுதனர். குழந்தைகள்  ஆவலுடன்  வெறித்திருந்தன. மூத்தோர்  குற்றவுணர்வுடன் குனிந்து அமர்ந்திருந்தனர். மக்களை நோக்கித் திரும்பினான்  ஒருவிழி அற்றவன். கை கூப்பி அழுது கொண்டிருந்தவனின் பின்னே இலுப்பையில் எரி எழும் ஓசை கேட்டது. சொடுக்கி நிமிர்ந்தான்  அவன்.
"என் இனமே! விரைக! வடக்கில்  எழுகிறான் நம் ஆதவன். அத்திசை நோக்கி விரைக! சுனதா! என்  இறையே!" என கட்டியிருந்த கால்களுடன்  உந்தி எரி புகுந்தான்  அவன். நெருப்பில்  அவன் அவிந்த ஓசையுடன்  உள்ளிழுத்த மூச்சின் ஒளி ஒன்றிணைய மொத்தமும்  சொல்லவிந்து அமர்ந்திருந்தனர் அக்குடியினர்.
எழுந்தாள் ஒரு மூத்தவள். "எழுக! அஞ்சிக் குறுகி மிதிபட்டு இறப்பதனினும் எழுந்து நடந்து தலையறுபட்டு இறப்பது  மேல். எழுக!" என்றாள். அன்றிலிருந்து  வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினர் மக்கள். சுனதனும்  கதைகளாய்  மக்களிடம்  வந்து கொண்டிருந்தான். நூற்றுக்கு ஒருவர்  கூட வடக்கே விரிந்திருந்த பெரும்  பாலையை கடக்க முடியவில்லை. பாலையிலேயே மடிந்தனர் பலர். முன்பு  இறந்தவர்களின்  உடல் மிச்சங்களை உண்டு எஞ்சியவர்கள்  நகர்ந்தனர். வடக்கு  நோக்கி நகர்பவர்களின் எண்ணிக்கை  பெருகவே மாவவியத்தின் படைகள்  வடக்கில்  எழுந்தன. குடும்பத்துடன் வடக்கை கடப்பவர்களை யானைக் கொட்டடிக்கு கொண்டு சென்று குழந்தைகளை ஒரு கூண்டில் அடைத்து மூத்தவர்களை களிறுகளின் காலுக்கு கீழே கிடத்தினர். தனக்கு  முலையூட்டியவளும் தோளில் சுமந்தவனும் குருதிச் சேறாகி சுழித்துக் கிடப்பதைக் கண்டன குழந்தைகள். பித்தேறி இறந்தன. வெறிபிடித்து அடித்துக் கொண்டன. ஓடிச் சென்று களிறுகளின் காலுக்கு கீழே  தலை வைத்தன. ஒருவன் மட்டும் "வடக்கு " என்ற வார்த்தை மட்டும் உதட்டில் ஒட்டியிருக்க எவர்தொடாமேட்டினை அடைந்தான். களிற்றின்  மேல்  நின்றிருந்த சுனதனைக் கண்டான். "என் இறையே" என தலைக்கு  மேல்  கை கூப்பி ஓடி வந்தவன் களிற்றின்  கால்களில்  ஆங்காரத்துடன் மோதி மண்டை  பிளந்து இறந்தான். துடித்திறங்கிய சுனதன் மெல்லத் தளர்ந்து அவனை அள்ளித் தூக்கி சிதையமைத்து எரித்தான்.
வானத்தை  வெறித்தவாறு படுத்திருந்தான் சுனதன். மாசறியான் "புறப்பட உளம் கொண்டுவிட்டாயா? ” என்று கேட்டபடியே களிற்றின் மேல் படுத்திருந்த சுனதன் அருகே வந்தார்.
"ஆம் தந்தையே" என எழுந்தமர்ந்தான்  சுனதன். மாசறியான்  ஏதோ சொல்ல வர அவரைத் தடுத்து "அவர்கள்  என்னை மிகைப்படுத்திக் கொள்கிறார்கள். கடுங்குளிரில் நடுங்குபவனுக்கு சிறு பொறியும் பெரு நெருப்பென்றே தெரியும். மேலும்  இங்கும் நாளும்  மக்கள்  பெருகுகின்றனர். மாவலியருக்கு  இப்பாலையை கடப்பது  வீண் வேலை  என்ற எண்ணம்  இருப்பதாலேயே இவ்விடம்  எஞ்சி இருக்கிறது. மக்கள்  பெருக்கம்  அதிகமாகிறது  என்று  அறிந்தால்  அவர் படைகள் கொடும் பாலையைக் கடந்து எவர்தொடாமேட்டினையும் கைக்கொள்ளும். மக்களிடம் நம்பிக்கை என ஓரிடம் எஞ்சியிருக்க வேண்டும்  தந்தையே. அதற்காகவேனும் இவ்விடம்  இருந்தாக வேண்டும். நான்  புறப்படுகிறேன்" என்றான். செங்குதிரையான நிரத்துவன்  அவனருகில்  வந்தது. மாசறியான்  துணுக்குற்றார். “ மைந்தா! அன்னையிடமும் குடியிடமும் விடைபெற வேண்டாமா?" என்றார்  பதறிய குரலில். அதற்குள்  அவன் நிரத்துவன்  மீது ஏறியிருந்தான். மாசறியானைத் திரும்பி நோக்காது "கனி விழும் தருணத்தை மரம் நிர்ணயிப்பதில்லை தந்தையே" என்றான்.
பின்னர்  ஒரு நீள் மூச்சுடன் "கனியும்  நிர்ணயிப்பதில்லை”  எனச் சொல்லி  அவர் பார்வையிலிருந்து  மறைந்தான்.

Monday 27 June 2016

பெருஞ்சுழி 10

10
    மாவலியன் அரியணை  அமரவில்லை. ஒவ்வொரு  நாளும்  ஒரு நிலம்  அவன் வெல்வதற்காக  காத்து  நின்றது. தன் நிலம்  நோக்கி  மாவலியன்  வருகிறான்  என்று  அறிந்ததுமே மன்னர்  பலர் மணிமுடியை  அரியணையில்  வைத்து  நகரொழிந்தனர்.
முமனகம் என்ற சிற்றரசின்  தலைவன் “மாவலியனை  மண்ணில் சாய்ப்பேன். என் உயிர்  இவ்வுடல் நீங்காமல்  அவன் என் நிலம்  நுழைய  அனுமதியேன்” என வஞ்சினம் உரைத்தான். முமனகத்தின் மன்னன்  அனங்கன் பேரழகன்.
மாவலியன்  அவனினும் இளையவன். அனங்கனின் வஞ்சினம்  மாவலியனை எட்டியது.  முமனகம்  வீழ்ந்தது. மாவலியன்  அனங்கனைக் கொல்லவில்லை. அவன் கண் முன்னே  அவன் ஆறு புதல்வர்களின் தலையும்  வெட்டப்பட்டு  அவை  வளையீட்டியில் கோர்க்கப்பட்டு அனங்கனுக்கு மாலையெனப் போடப்பட்டது. வெறித்த விழிகளோடு பித்தேறி நிற்கும்  அனங்கனை புழுக்கள்  மண்டிய  அவன் புதல்வரின் சிரங்களுடன் நகர்வலம்  அனுப்பினான்  மாவலியன்.  அக்காட்சி  கொடுத்த அதிர்ச்சி  எதிர்க்க  முடியாதவனாய் அவனை  உருப்பெறச் செய்தது. அவன்  விவாதிப்பதில்லை. ஆணைகள்  மட்டுமே  அவன்  வாயுதிறும்.
சகேரீதம் முமனகத்தினும் படை வல்லமை மிகுந்த அரசு. திவலகன் என்றவன்  ஆளுகைக்கு  உட்பட்டிருந்த அந்நாடு மாவலியனின்  கனவுகளுக்கு எல்லையென குறுக்கே நின்றது. எழுந்த சிம்மத்தின் ஆற்றல் அறிந்த ஆடுகள்  என திவலகனனை நோக்கி பல சிறு குடிகள் தங்களை  ஒப்புக்  கொடுத்து ஒன்றிணைந்தன. இறந்த புழுவினை இழுக்கும்  எறும்புகள்  என நாளும்  சகேரீதத்தை நோக்கி அரசர்களும்  சிறுகுடித் தலைவர்களும் ஊர்ந்து நெருங்கினர். வல்லமை பெருகப் பெருக  திவலகன்  முறுக்கேறினான்.  கூட்டரசுகளின் செல்வமும்  படையும்  கொடுத்த ஊக்கத்தில் கைப்பற்றப்பட்டிருந்த முமனகத்தின்  வடக்குப் பகுதியை போரிட்டு வென்றான்  திவலகன். மாவலியன்  எவ்வெதிர்ப்பும் காண்பிக்கவில்லை.
அவன் நிலையழிந்திருப்பதை உணர்ந்த மாவலியத்தின் தளபதி அனிந்தர் "முமனகத்தை சில நாட்களில்  கைப்பற்றி விடலாம். உங்கள்  அனுமதி  மட்டுமே  வேண்டும்" என்றார். கைகளை  பிசைந்து கொண்டே  பீடத்தில்  அமர்ந்திருந்த மாவலியன் "இல்லை  அனிந்தா! இந்நேரத்தில்  போரிட்டால் நாம் அழிவோம். திவலகருடன் நான்  சமாதானம்  கொள்ள விழைகிறேன். அவரின்  கோரிக்கைகள் என்னவென்று  கேள்" என்றான். அனிந்தருக்கு திவலகனின் கோரிக்கைகள்  தெரியும். மாவலியம் என்றான வெண்குடி நாட்டின்  பசுக்களும் பெண்களும். யாரும்  எதிர்பார்த்திராத  இன்னொரு  கோரிக்கையும் வைத்தான் திவலகன். நட்பரசுகளுக்கே அது அதிகம்  எனப்பட்டது "மாவலியன்  என் தாள் பணிந்து மன்னிப்பு  கோரிச் செல்ல வேண்டும்" என்றான். மாவலியனும்  அவ்வாறு  செய்து மாவலியம் மீண்டான். நாட்கள்  செல்லச்  செல்ல  மாவலியன்  மீதிருந்த மக்களின்  மதிப்பும்  பயமும்  நீங்கியது. மாவலியன் குறித்து இளிவரல் பேச்சுகள் பெருகின. அனிந்தருக்கு  மட்டுமே  மாவலியனின்  நிலைப்பாடு  புரிந்தது.
சில மாதங்கள்  கடந்தன. தன்னை சந்திக்க வருமாறு மாவலியன் அனிந்தரை அழைத்திருந்தான்."புறப்படலாம் அனிந்தா" என்றான் மாவலியன். அவனே தொடரட்டும்  என அனிந்தர் காத்திருந்தார். "திவலகன் திறன் படைத்த  வேட்டை நாய். ஆனால்  மாமிசத் துண்டுகளில் மகிழ்வு கொண்டுவிடும் எளிய மனம்  கொண்டவன். அவனுக்கு  நான்  அளித்தது  அது தான்  என அறியாமல் இன்பத்தில் மூழ்கிச் சத்திழந்துவிட்டான் மூடன். நம் படை நகரட்டும். எண் திசைகளிலும்  சகேரீதமும் அதன் கூட்டரசுகளும் சூழப்படட்டும். எதிர்க்கும்  ஒவ்வொருவனையும்  கொன்ற பிறகே நம் படை முன்னேற வேண்டும் . கால் அறுந்தோ கண்ணிழந்தோ கரங்கள்  வெட்டப்பட்டோ ஒருவனும் எஞ்சக் கூடாது. இவ்வாணை மட்டும்  எங்கும்  நின்றாக வேண்டும். உயிர்  பறிக்காமல் ஒருவனும்  விடப்படக் கூடாது." அதே அமைதியுடன்  மாவலியன்  சொல்லிக்  கொண்டிருந்தான். "இன்னும்  ஒரு நாழிகையில்  மாவலியத்தின்  கிழக்கெல்லையில்  நம் படைகள்  புறப்பட்டாக வேண்டும். பருங்கம் என்ற நதியில்  மேற்கில்  இருக்கும்  அத்தனை வீரர்களையும்  ஓடத்தில்  ஏற்றுங்கள். நதிகளின்  கரைகளில்  சருகடர்ந்த மரங்களே அதிகம். கொள்ளுமளவு ஓடங்களில் இலுப்பை எண்ணெய்  பீப்பாய்களை ஏற்றுங்கள். எறிபொறி அமைத்து பீப்பாய்கள் கரையோரக் காடுகளில்  சென்று தைக்குமாறு வீசுங்கள். எரியம்புகள் எய்து காடுகளை கொளுத்துங்கள். வன மிருகங்கள்  நமக்கு முன் சகேரீதத்தை சூழும்." என்று சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே குறுக்கிட்ட அனிந்தர் "அரண்மனை  பாதுகாப்புக்கு?" என்றார்.
"ஆணெனப் பிறந்த எவனும்  மாவலியத்தில்  இருக்க வேண்டாம். நடக்க முடிந்த சிறுவர்கள்  உட்பட அனைவரையும்  நிரையில் இணையுங்கள். தேர்ந்த வீரர்களின் நிரை தனியெனவும் இவர்கள்  நிரை தனியெனவும்  அமையட்டும்." என எவ்வுணர்ச்சியும்  இன்றி  கூறினான் மாவலியன்.  துணைத் தளபதி அமதிரன் கோபமுற்றவனாய் எழுந்து "இதற்கு  நான் ஒப்ப முடியாது. மன்னன் மக்களின்  ஆணை பெற்று ஆள்பவன். தன் ஆணவத்திற்கென அவர்களை பலியிட அவனுக்கு  உரிமை இல்லை. என் உயிர் கொடுத்..." என அவன் சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே மாவலியன்  அலட்சியத்துடன்  விட்டெறிந்த வாள் அவன் தலையில்  பாதியை வெட்டி  நின்றது. இறுதிச் சொல் சில நொடிகள்  இதழில்  ஒட்டியிருக்க  அமதிரனின்  உடல் தரையில்  விழுந்தது . மாவலியன்  தொடர்ந்தார். "நம் படைக்கலங்கள் அனைத்தும்  வெளியே  எடுக்கப்படட்டும். ஒன்றும்  குருதி  பார்க்காமல்  உள்ளறைத் திரும்பக் கூடாது. புறப்படு அனிந்தா! இன்றிரவே சகேரீதத்தை முற்றழித்தாக வேண்டும். உன்னை திவலகனின்  அரண்மனையில்  சந்திக்கிறேன்" என்று உள்ளறை சென்றான்.
சில  நொடிகள்  திகைத்து  நின்ற  அனிந்தர்  அவசரமாக  விடுக்கப்பட்ட அந்த ஆணைகளின் கூர்மையையும் துரிதத்தையும் எண்ணினார். கூர்மை தான்  மாவலியனின்  பலம்  என எண்ணினார். ஒற்றர்கள்  அறிந்திருக்கவே முடியாத பெருந்திட்டம். செயல்படப் போகும் நொடி வரை அவன் ஒருவனே  அறிந்த சித்திரம். எண்ணும் போது இன்னும்  விரிந்தது  அவன் உருவம். எண்ணத்தை  கலைத்துவிட்டு  இறங்கி நடந்தார் அனிந்தர். தன் மனம்  அணுவளவும் விரும்பாத ஆணைகளை சித்தம்  செறிவான  சொற்களில்  வெளியிட்டுக் கொண்டிருப்பதை அவரே எண்ணி வியந்தார். வெறுப்பும்  வெறியும்  கொண்டு பெரும்புயலென சகேரீதத்தை  சூழ்ந்தனர் மாவலிய வீரர்கள். அனிந்தர்  உயிர் எஞ்சாது வீழ்த்த வேண்டும்  என மாவலியன் ஆணையிட்டது முதலில்  தவறென  எண்ணினார். ஆனால்  எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த கணம் கண்டவன்  என ஒவ்வொரு வீரனும்  ஊறித் திளைத்தான் அக்கொலை வெறியாட்டில். இறப்பவனின் ஓலமும் கெஞ்சலும் அருவருப்பும் இரக்கமும்  கொள்ளச் செய்ய அதுவே இன்பம்  என்றாவதை அனிந்தர் கண்டார். எதிர் நின்ற சகேரீதத்தின் வீரர்கள்  அஞ்சிப் பதுங்கினர். கால் பற்றி மன்றாடினர். ஒருவனும்  மிஞ்சவில்லை. மாவலியன்  தன் துணைவீரர்கள் நூற்றுவருடன் விரைவுப் புரவிகளில் சகேரீதம்  நுழைந்தான். வாளின் வேகத்தில்  கதை சுழற்றினர் வீரர்கள்  ஒவ்வொருவரும். கல்பட்ட நீரென எதிர் வந்தவர்களின்  சினங்கள் கலங்கித் தெறித்தன. ஒற்றைப் பெருவிசையென பெரும்புயலென பேரலையென பேரிடி என நூற்றுவர் கடந்து  சென்ற இடமெங்கும் தலை தெரித்து மடிந்து கிடந்தனர் சகேரீதத்தின் பெரு வீரர்கள்.
அனிந்தரின் படை நிரையில்  ஓசைகள் அவிந்து வந்தன. இறப்பவர்களின் வலி முனகல்கள் மட்டுமே  கேட்டுக்கொண்டிருந்தன. உயிருக்கு மன்றாடி ஊளையிட்டு மடிபவர்களின் ஓலங்கள் சில சமயம் உச்சமென கேட்டுக் கொண்டிருந்தன. பற்றி ஏற சருகுகள்  இல்லாத நெருப்பென மாவலியத்தின் வீரர்கள்  சடசடத்து வெறித்து நின்றனர். கொல்லப்படுவதற்கு வீரர்கள்  குறைந்த போதே அவர்கள்  நிகழ்த்தியவற்றை அவர்கள்  கண்டனர். புழுக்கள்  போல குருதியில்  நெளிந்தனர் இறப்பவர்கள். தாயொருத்தி இறந்து கொண்டிருக்கும் தன் கணவனை மார்போடு அணைத்து  தன் மகவிற்கு முலையூட்டிக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட கணம் தலையறுத்து மண்ணில்  விழ நினைத்தான்  மாவலியத்தின் வீரன் ஒருவன். இன்னொன்றும் அவனை இயக்குவதை அனிந்தர்  கண்டார். இன்னொன்று  வென்றது. முலையூட்டியவள் மகவினை இழுத்து வீசிவிட்டு அவள் ஆடைகளை  அவிழ்த்தெறிந்து அவள் கணவன்  உடல் மேல்  அவளைக் கிடத்திப் புணர்ந்தான் அவ்வீரன்.வெறித்துத் திகைத்த விழிகளுடன்  கிடந்தாள் அப்பெண். அனிந்தர்  அவனைத் தடுக்க ஓரடி முன்னெடுத்து  வைத்தார். பின்னர்  "இல்லை" என தலையசைத்துக் கொண்டு தன் புரவியை திருப்பித் தட்டிவிட்டார்.
திவலகனின்  அரண்மனை  ஓலங்களால் நிரம்பியிருந்தது. திவலகனையும் நட்பரசர்களையும் தப்பிக்கச் செய்ய சகேரீதத்தின்  தளபதி  சுபனன் தலைமையில்  ஆயிரம்  தேர்ந்த வீரர்கள் நிரைவகுத்தனர். எறும்பு வரிசையை கலைக்கும் பெரு விரலென மாவலியனும்  நூற்றுவர்களும் ஆயிரவர் படையை சிதறடித்தனர். அம்புகளும் நெருங்க முடியாத வேகத்தில்  சரியான இடைவெளியில்  நூற்றுவர்கள்  கதை சுழற்றியவாறே திவலகன்  தப்பிச் செல்லவிருந்த சுரங்கத்தை நெருங்கினர். மாவலியனின்  காலடிச் சத்தம் கேட்டதுமே அதிர்ந்த திவலகன் "என் இறையே" என இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு கண்ணீர்  வழிய மாவலியனை நோக்கி ஓடி வந்தான். கூப்பிய கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெறிந்தான் மாவலியன். திவலகன்  திகைத்து  நின்றிருக்கவே கணுக்கால்  வரை கால்களை வெட்டினான். அது போன்றே அத்தனை நட்பரசர்களும் வெட்டப்பட்டனர். அதன்பின்  அவர்களை மாவலியன்  திரும்பி நோக்கவில்லை. எஞ்சிய  கரங்களையும்  கால்களையும்  இழுத்துக் கொண்டு முனகியவாறே அவ்வரசர்கள் ஊர்ந்தனர். அரண்மனையின்  பந்த ஒளிகளைத் தாண்டி இருளுக்குள்  அவர்கள்  ஊர்ந்தனர். வலியை அவமானத்தை பெருந்துக்கத்தை இருள் மட்டுமே  ஆற்றுப்படுத்த முடிகிறது.
அனிந்தர்  தனக்குப் பின்னே மாளிகைகளிலிருந்து பெண்கள்  தூக்கியெறியப்படும் ஓசைகளை கேட்டார். பெண்ணெனத் தென்பட்ட ஒருவரையும்  அவர்கள்  விடவில்லை. தொடக்கத்தில்  ஓலங்களும் அழுகைகளும் வசைகளும் கேட்டன. பின்னர் முனகல்கள்  ஆகி அவ்வோசை சிரிப்பொலிகளாக இளிவரல்களாக ஏளனங்களாக முத்தங்களாக அணைப்புகளாக கண்ணீராக சீர் மூச்சாக குறட்டை ஒலிகளாக மாறுவதை அனிந்தர்  கேட்டார். மானுடம்  என்பதை கடந்து அல்லது  மறந்து புணர்ந்தபின் உறங்கும்  வன மிருங்களாக அவர்கள்  கிடந்தனர். குருதியிழிந்த இறந்த உடல்களுக்கு  நடுவே புணர்ந்து இறுகிக் கிடந்தன உயிருள்ள உடல்கள். உயிரற்றவர்கள் மட்டுமே  ஆடையோடிருந்தனர். அனிந்தர் விண் நோக்கி தலை உயர்த்தினார். என்றும்  போல் அன்றும்  விண்மீன்கள் சிரித்துக் கொண்டிருந்தன. பாணன் பெருமூச்சுவிட்டான். சுனதனைத் தவிர  துயரவர்கள்  அனைவரும்  அதிர்ந்து அமர்ந்திருந்தனர். அவன் விழிகளில்  மட்டும்  விண்மீன்கள்  மின்னிக் கொண்டிருந்தன.